Sunday, November 29, 2009

அரசு மருத்துவமனையில் பரபரப்பு

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளியை, மருத்துவமனை ஊழியர்கள் வெளியே வீசியது, செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு நுழைவாயில் அருகில், சாலையோரம் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க பெண் அனாதையாக கிடந்தார். அழுக்கடைந்த துணிகளை போர்த்தியிருந்தார். அப்பெண் மெலிந்த தேகத்துடன் பரிதாபமாக காணப்பட்டார். காலை புறநோயாளிகள் பிரிவிற்கு வந்தவர்கள் அப்பெண்ணை பரிதாபமாக பார்த்தபடி சென்றனர். மருத்துவமனை எதிரிலிருந்த கடைக்காரர்கள் கூறும்போது, “நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு மருத்துவமனை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட பெண்ணை, “ஸ்டிரெச்சரில்’ கொண்டு வந்து வீசிச் சென்றனர். அந்தப் பெண் இரவில் குளிரிலும், மழையிலும் கேட்பாரின்றி கிடந்தார். யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அவர் தெலுங்கில் ஏதோ கூறிக் கொண்டிருந்தார். சிலர் தெலுங்கில் பேசியபோது ஆந்திர மாநிலம், நவ்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த எரையன் மனைவி என தெரிவித்தார்’ என்றனர். இது குறித்து, நேற்று சிலர் மருத்துவமனை டீனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் பகல் 12 மணிக்கு டாக்டர்கள் ஊழியர்களுடன் வந்து, “ஸ்டிரெச்சரில்’ அந்தப் பெண்ணை தூக்கிச் சென்று, வார்டில் அனுமதித்தனர். பின் அந்தப் பெண்ணுக்கு குளுக்கோஸ் ஏற்றினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணை, ஊழியர்கள் வெளியே வீசிச்சென்றது குறித்து, டீன்(பொறுப்பு) ஜெகன்நாதனைக் கேட்டபோது அவர் கூறியதாவது: அந்த பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர். திருப்போரூரில் கணவனுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன் அவரது கணவர் இங்கு வந்து சேர்த்தார். அப்போது அவர்கள் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த ஆவணங்களைப் பார்த்தபோது, அந்தப்பெண் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மருத்துவமனை ஊழியர்கள் பணம் வசூலித்து அவரது கணவனுக்கு 500 ரூபாயை கொடுத்தனர். பணத்தை வாங்கிய அவர், மூன்று நாட்களுக்கு முன், ஓடி விட்டார். யாரும் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணை ரத்தப் பரிசோதனைக்காக வார்டு பாய் ஸ்டிரெச்சரில் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். பின் மற்றொரு நோயாளியை அழைத்து வருவதற்குள் இப்படி நிகழ்ந்து விட்டது. இவ்வாறு டீன் கூறினார். நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கே ஸ்டிரெச்சரில் தூக்கிவந்து வெளியே போட்டுவிட்டு சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறியது குறித்து கேட்டதற்கு, “நேற்றுமுன்தினம் பணியிலிருந்த வார்டு பாய் இன்று விடுமுறை. நாளைக்கு வருவார். இது குறித்து விசாரிக்கிறேன். அவர் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் சானடோரியம் மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை, மனிதாபிமானமற்ற மருத்துவமனை ஊழியர்கள் வெளியே வீசிய சம்பவம், செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment